எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் அருண் சுபாஷ் என்பவர் வழக்கு விசாரணைக்காக நீதிபதிக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி வழக்குதாரரிடம் ரூ.50 ஆயிரம் பணம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பணம் கொடுத்த வழக்குதாரர், நீதிபதிக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டு வழக்கறிஞர் பேசியதை தனது மொபைலில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நீதிபதியிடமே நேரில் காட்டியுள்ளார்.
இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனக் கூறிய நீதிபதி, இது தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
நீதிபதி அலுவலக உதவியாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் அருண் சுபாஷ் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த எழும்பூர் போலீசார், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.