காஞ்சிபுரத்தில் பணமோசடி என தவெக பெண் நிர்வாகி மீது புகார் pt
தமிழ்நாடு

9 லட்சம் பண மோசடி.. முதியவர் விபரீத முடிவு! தவெக பெண் நிர்வாகி மீது புகார்!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே அரசு வீடு வாங்கித் தருவதாக கூறி 9 லட்சம் ரூபாய் மோசடி செய்ததால் மனஉளைச்சலுக்கு ஆளான 73 வயது முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

அமைச்சர் பெயரை முன்வைத்து அரசு அடுக்குமாடி வீடு தருவதாக கூறி 9 லட்சம் ரூபாய் மற்றும் நில ஆவணங்களை மோசடி செய்ததாக தவெக பெண் நிர்வாகி மீது புகார். பணத்தை இழந்த முதியவர் உயிரிழந்த சோகம்.

செய்தியாளர் - கோகுல்

சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (73), தனது குடும்பத்துடன் படப்பை அருகே குடியேறிய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் கலைவாணி, அமைச்சர் தென்னரசுவின் பெயரை கூறி அரசு அடுக்குமாடி வீடு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, முதற்கட்டமாக ரூ.7 லட்சம் பெற்றுக்கொண்ட கலைவாணி, பின்னர் ஏடிஎம் கார்டு மூலம் மேலும் ரூ.2 லட்சம் எடுத்ததுடன், நில ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு திருப்பித் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

பணம் மற்றும் ஆவணங்களை இழந்த விஸ்வநாதன், படப்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த விஸ்வநாதன், “பணத்தை மீட்டுத் தருகிறேன்” என குடும்பத்தினரிடம் கூறிவிட்டு எலி மருந்து குடித்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில், தவெக நிர்வாகி கலைவாணி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் படப்பை காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.