காவல்துறை அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமை மற்றும் அத்துமீறல்களுக்கு உள்ளான ஆறு பெண்கள் உள்பட மொத்தம் 15 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த டி.மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த காசி என்பவரை, கடந்த 2011 நவம்பரில் திருக்கோவிலூர் காவலர்கள், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அன்றையதினம் இரவு 8 மணிக்கு அவரது மனைவி லட்சுமி, மாமனார் குமார், சகோதரிகள் ராதிகா, வைதீஸ்வரி, மைனர் சகோதரர்கள் படையப்பா, மாணிக்கம் உள்பட மொத்தம் 14 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
இவர்களில் குறிப்பிட்ட நான்கு பெண்களை தைலாபுரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு காவலர்களேவும் உட்படுத்தியதாக கூறப்படுகிறது. இக்குற்றங்களுக்காக திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், ஏட்டு தனசேகரன், காவலர்கள் பக்தவத்சலம், கார்த்திகேயனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான லட்சுமி என்பவர், விழுப்புரம் கூடுதல் எஸ்பி-யிடம் புகார் அளித்தார்.
இதுசம்பந்தமாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், இரவு நேரத்தில் பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருக்க கூடாது என்ற உத்தரவை மீறி, ஆறு பெண்களை காவலர்கள் கட்டாயப்படுத்தி காவல் நிலையத்தில் வைத்திருந்ததும்; காவல்நிலையத்திலிருந்த ஆண்களை தாக்கியதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, பாதிக்கப்பட்ட 15 பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க தற்போது உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகளுக்கு எதிரான துறை ரீதியிலான நடவடிக்கையில் மூன்று மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்ட ஆணையம், காவல் துறையினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: 3 ஆண்டுகளாக பேத்திக்கு பாலியல் தொல்லை: தாத்தா போக்சோவில் கைது