செய்தியாளர்: சுப்ரமணியம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மொடச்சூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவின் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த அந்தியூரைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் திடீரென எழுந்து செங்கோட்டையனை பார்த்து, ”கட்சி நிர்வாகியாக இருக்கும் எனக்கு எங்கு கூட்டம் நடந்தாலும் அழைப்பு தருவதில்லை; இதை இந்த கூட்டத்தில் உங்களிடம் தெரிவிக்கிறேன்” எனக் கேள்வி எழுப்பினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கேள்வி கேட்ட அந்த நிர்வாகியை மேடையின் அருகே வருமாறு அழைத்தார். அப்போது அந்த நிர்வாகி மேடையில் ஏறி, அங்கே நின்றிருந்த செங்கோட்டையனிடம், ”எந்த கூட்டத்துக்கும் எனக்கு அழைப்பு விடுப்பதில்லை” என்று ஆவேசமாக பேசிய போது மேடையில் கூட்டமாக நின்றுகொண்டிருந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அந்த நபரை தாக்கத் தொடங்கினர். இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியதுடன், அந்த நபர் மீது நாற்காலிகளை தூக்கி வீசினர்.
இதைத் தொடர்ந்து செங்கோட்டையன், ”கேள்வி கேட்ட நபர், எந்த கட்சி பொறுப்பிலும் இல்லை. பொறுப்பில் இல்லாதவர்களை எவ்வாறு அழைப்பது” எனப் பேசினார். தொடர்ந்து அவர், “கடந்த சட்டமன்ற தேர்தலில் அந்தியூர் தொகுதியில் அதிமுக தோல்வியுற்றதற்கு காரணம், அங்கு முன்னாள் எம்எல்ஏவாக இருந்த ராஜா கிருஷ்ணமூர்த்திதான். அவர் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக பணியாற்றியதற்கு உங்களிடம் சிடி ஆதாரம் உள்ளது. இப்படிபட்ட ஒரு துரோகத்தை செய்துவிட்டு இப்போது குழப்பத்தை செய்ய கூட்டத்திற்கு ஆள் அனுப்பி உள்ளார். இந்த நிகழ்வு திட்டமிட்டு நடத்தப்பட்டது” என விளக்கமளித்தார்.
இதற்குப் பின்னர் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதலுக்கு உள்ளான நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டத்தில் தாக்கப்பட்ட நபர், அந்தியூர் ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் என்பதும் தெரியவந்துள்ளது.