கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக முகநூலில் கருத்து பதிவு செய்த அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை நெடுவாசல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலம் ஆகிய இடங்களில் எரிவாயு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக முகநூலில் கருத்து பதிவிட்ட அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த குபேரன் என்பவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். இவர் கடந்த 20-ஆம் தேதி, கதிராமங்கலம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், அங்கிருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் எனவும் முகநூலில் கருத்து பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
முன்னதாக, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடி வந்த கல்லூரி மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசும்போது, ஜனநாயகத்தில் போராடுவதற்கு உரிமை உண்டு. ஆனால் மக்களை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்ற போது குண்டர் சட்டம் கண்டிப்பாக பாயும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.