தமிழ்நாடு

சேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ பாதுகாப்பு !

சேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ பாதுகாப்பு !

rajakannan

எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ள சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை காவல்துறை தரப்பில், “சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார் ஈடுபடவுள்ளனர். 13 காவல் துணையாளர்கள் தலைமையில் இந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். 7 கூடுதல் துணை ஆணையர்கள், 29 உதவி ஆணையர்கள், 100 ஆய்வார்கள் ஈடுபடுவர். சேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்படும். கமாண்டோ படையின் ஒரு அணியும், அதி தீவிர படையின் 4 குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும். கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள். 

சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றியுள்ள சாலைகள் நாளை மாலை 6 மணிக்கு மூடப்படும். அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக சேப்பாக்கம் செல்லும் சாலை மூடப்படும். பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை, விக்டோரியா சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நெட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நாளைய போட்டி நடைபெறவுள்ளது. ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது, வேறு  இடத்திற்கு மாற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து இருந்தன. மீறி போட்டி நடந்தால் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கும் தொணியில் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சேப்பாக்கத்தை ஒட்டியுள்ள பகுதிகள் நாளை காவல்துறை கட்டுப்பாட்டில் வரவுள்ளது.