தஞ்சையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும், விவசாயிகள் கைதை கண்டித்தும் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதற்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம் இருக்க முற்பட்டனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்தும் மருதுபாண்டியர் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் திடீரென தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சாலை மறியல் செய்தனர். போராட்டத்தின் போது, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.