மதுரையில் கல்லூரி மாணவி கலையரசி, யூடியூப் வீடியோவில் கூறியபடி வெங்காரம் சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இது அவரது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியின் தந்தை வேல்முருகன், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுக்க வேண்டாம் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மாநகர் செல்லூர் மீனாம்பாள்புரம் காமராஜர் குறுக்குத்தெரு பகுதியை சேர்ந்த வேல்முருகன் (51) - விஜயலெட்சுமி தம்பதியினர் மகன், மகள் என இரு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர்.
கட்டிட வேலை பார்த்துவரும் வேல்முருகன் தனது இளைய மகளான கலையரசியை நன்கு படிக்க வைத்துள்ளார். மதுரை நரிமேடு பகுதியில் பிரபலமான தனியார் கல்லூரியில் கலையரசி முதலாமாண்டு படித்துவந்துள்ளார்.
இந்நிலையில் கலையரசி சிறிதளவு உடல்பருமனாக இருந்துள்ளார். இதனால் அவ்வப்போது தனது பெற்றோரிடம் உடல் பருமனை குறைக்க வேண்டும் என கூறிவந்துள்ளார். அப்போது பெற்றோரும் உடல்பருமன் தானாகவே குறைந்துவிடும் என கூறிவந்துள்ளனர்.
இதனிடையே கடந்த வாரம் கல்லூரி மாணவி கலையரசி இணைவோம் இயற்கையுடன் என்ற YOUTUBE பக்கத்தில் உடல் எடை குறையாதவர்களுக்கு Fat கரைய வைத்து உடலை மெலிவிக்கும் வெங்காரம் என்ற தலைப்பில் பதிவிட்டிருந்த வீடியோ பதிவை பார்த்துள்ளார்.
இதையடுத்து கடந்த 16ஆம் தேதியன்று மதுரை கீழமாசி வீதியில் தேர்முட்டி அருகில் நாட்டு மருந்து கடையில் வெங்காரம் என்ற நாட்டு மருந்து பொருளை வீட்டிற்கு வாங்கிவந்துள்ளார்.
இதையடுத்து சனிக்கிழமை அன்று காலை யூடியுப்பில் கூறியதுபோல வெங்காரத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி வயிற்றுபோக்கும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கலையரசியை அவரது தாயார் விஜயலெட்சுமி மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் அழைத்துசென்று சிகிச்சையளித்துள்ளனர்.
பின்னர் மாலையில் வீடு திரும்பிய நிலையில் கலையரசிக்கு மாலை மீண்டும் வாந்தி வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் வீட்டின் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
வீட்டிற்கு வந்த கலையரசி தனக்கு அதிகமாக வயிறுவலிப்பதாகவும் வயிற்றுபோக்கில் ரத்தம் வெளியேறி வருவதாகவும் கூறி தனது தந்தையை கட்டிபிடித்து அழுதுள்ளார்.
ஆனாலும் மீண்டும் கலையரசிக்கு இரவு 11 மணியளவில் அதிகளவிற்கு வாந்தி, அதீத வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கலையரசியை அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் கலையரசியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் கலையரசி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறி உள்ளனர்.
பின்னர் கலையரசியின் உடல் உடற்கூராய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரையில் கல்லூரி மாணவி உடல் பருமனை குறைப்பதற்காக யூடியூப் சேனலை பார்த்து எடுத்துக்கொண்ட மருந்தால் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கண்ணீர் மல்க பேசிய மாணவியின் தந்தை வேல்முருகன், எனது மகள் உடல் பருமனாக இருப்பதாக கவலையில் சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போது youtube பார்த்து வெங்காரம் வாங்கி சாப்பிடும் போது, இது எல்லாம் சாப்பிட வேண்டாம், மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் சாப்பிட வேண்டாம் என கூறினேன். ஆனாலும் உடலை குறைக்க வேண்டும் என்பதற்காக யூடியூப்பில் சொன்னபடி வெங்காரத்தை சாப்பிட்டார்.
பின்னர் சிறிது நேரத்திலேயே வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதித்தோம். மீண்டும் மாலையில் வயிறு வலி, வாந்தி எடுக்கத் தொடங்கிய பின்னர் மருத்துவமனையில் காண்பித்து வீட்டுக்கு வந்தோம் இரவு எனது மகள் உளறி பேச தொடங்கினார்.
அப்போது அழுதபடி வயிறுவலிக்குதுபா, ரத்தமா வருதுபா, என்னை கட்டிபிடிப்பா என்னைய விட்ராதப்பா, காப்பாத்துப்பா என கதறி அழுதபோது வாந்தி மீண்டும் வந்தது.
இதையடுத்து அவசரவசரமாக அரசு மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.
சமூகவலைதளங்களை பார்த்து மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுக்க வேண்டாம், எனது மகளை போன்று யாரையும் இழந்துவிடக்கூடாது என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்..
இதேபோன்று மாணவியின் உறவினர் பேசிய போது, இதுபோன்ற youtube தளங்களை பார்த்து மருந்துகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் இது போன்ற விஷயங்களை கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.