புதுக்கோட்டையில் ஓடும் ரயில் முன்பு செல்பி எடுத்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை எஸ்எஸ்ஐ குமாரவேலின் மகன் மணிகண்டன் (19). இவர் புதுக்கோட்டை சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று மணிகண்டன் தனது நண்பர்களுடன் பூச்சி துறை அருகே உள்ள ரயில்வே பாலத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மானாமதுரை-மன்னார்குடி பேஸஞ்சர் ரயில் முன்பு மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் செஃல்பி எடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் எதிர்பாராத விதமாக ரயில் மோதி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த அவரது நண்பர் மகேந்திரன் என்பவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்த தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்த புதுக்கோட்டை நமண சமுத்திரம் போலீசார், மணிகண்டனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து காரைக்குடி ரயில்வே போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் ரயில் முன்பு செஃல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.