தமிழ்நாடு

கல்லூரி மாணவிகள் பலி: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு

கல்லூரி மாணவிகள் பலி: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு

webteam

டெங்கு காய்ச்சல் காரணமாக திருவள்ளுர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கல்லூரி மாணவிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேபோல வெவ்வேறு இடங்களில் 3 குழந்தைகளும் காய்ச்சல் மற்றும் டெங்கு காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காய்ச்சல் பாதிப்புகளுடன் ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கலையரசி என்ற கல்லூரி மாணவி, கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவருக்கு காய்ச்சல் அதிகரிக்கவே, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். இந்நிலையில், கலையரசி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அர்ச்சப்புரத்தை சேர்ந்த பாலையனின் மகள் ஆனந்தநாயகி, மன்னார்குடி அரசு கலைக் கல்லூரியில் எம்ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சில நாட்களாக காய்ச்சல் பாதிப்புடன் இரந்த ஆனந்தநாயகிக்கு ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆனந்தநாயகி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்ற அரசு பேருந்து ஓட்டுனரின் 12 வயது மகள் தேவிகா, கடந்த இரண்டு மாதங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். விட்டுவிட்டு காய்ச்சல் வந்தநிலையில், கடுமையான வயிற்றுவலியும் சேர்ந்து கொள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே சிறுமி தேவிகா உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த பரவளுர் கிராமத்தைச்சேர்ந்த ரமேஷ் என்ற விவசாயியின் குழந்தை, கடந்த இருதினங்களாக காய்ச்சலால் விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது.

இதேபோல, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த சேட்டு என்ற கூலித்தொழிலாளியின் 3 வயது மகள் தீபிகாவுக்கு நேற்று நள்ளிரவு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததால் மனமுடைந்த தாய் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். பேளுக்குறிஞ்சியை சேர்ந்த பெரியசாமி - அன்புக்கொடி தம்பதியருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் ஆறு மாதத்திற்கு முன் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு டெங்கு இருப்பது தெரியவந்ததையடுத்து, குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏராளமானோர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுக்கொண்டிக்கிறார்கள். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 128 பேர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 28 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பின் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கூர் பகுதியில் பூச்சி மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.