விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை குறித்த 806 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தியது. முன்னதாக கைது செய்யபட்ட 8 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர்களின் பெற்றோர், உறவினர் நண்பர்கள், பாதிக்கப்பட்ட பெண் அவரின் பெற்றோர் உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்டோரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் 806 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டது.
ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேருக்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திலும் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு எதிராக விருதுநகர் இளஞ்சிறார் நீதி குழுமத்திலும் சிபிசிஐடி டி.எஸ்.பி வினோதினி சுமார் 806 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையில் இளைஞர்கள் 4 பேர் மற்றும் பள்ளி மாணவர்கள் 3 பேர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக குற்றம் செய்ததற்கான சாட்சியங்களும், தடயங்களும் வலுவாக இருப்பதாகவும் ஒரு பள்ளி மாணவனுக்கு மட்டும் குற்றம் செய்ததற்கான சாட்சியங்களும் தடயங்களும் இல்லாததால் ஒரு பள்ளி மாணவன் வழக்கிலிருந்து விடுவிக்க வாய்ப்புள்ளதாகவும் அது குறித்து நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையில் முடிவு செய்யப்படும் எனவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல்கட்டமாக சாட்சியங்களிடம் நீதிமன்ற விசாரணையும் பின்னர் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள், குற்றம் சுமத்திய நபர், சாட்சியங்கள் என வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் குறுக்கு விசாரணை நடைபெற உள்ளது.