தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் தொடங்கியது. இந்தாண்டு வழக்கத்தை விட அதிகமான மழைப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கஜா புயல் பாதிப்புத் தான் அதிகம் இருந்தது. கிட்டத்தட்ட 12 மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப் போட்டது. ஆனால் மழை குறைவாகவே இருந்தது. தமிழகத்தில் இன்றுடன் வடகிழக்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், வழக்கத்தை விட 24 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை வழக்கத்தை விட 50 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்துள்ளது.
இதற்கிடையே, சென்னையில் கடந்த சில நாட்களாகவே அதிகப்படியான குளிர் காணப்படுகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான குளிர் காற்று வீசுவதால் ஊட்டி, மற்றும் கேரளாவில் இருக்கும் சூழ்நிலையே சென்னையிலும் நிலவுகிறது. சமீபகாலமாக கடும் பனிபொழிவு நிலவி வருவதால் காலை 8 மணி வரையில் பனி மூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். கடலோர மாவட்டங்கள் தவிர உள் மாவட்டங்களில் மூடுபனி நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மலைப்பகுதிகளில் உறைபனி இருக்கும் எனவும்
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெறும். இதனால் தமிழகத்திற்கு தற்போது வரை எந்த பாதிப்பும் இல்லை. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் சென்னையின் வெப்பநிலை அதிகபட்சம் 29 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 20 டிகிரியாக இருக்கும் ” என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.