தமிழ்நாடு

பாலியல் உறவுக்கு ஒத்துழைக்காததால் கொலை செய்தேன் !

பாலியல் உறவுக்கு ஒத்துழைக்காததால் கொலை செய்தேன் !

webteam

கோவையில் பெண் கொலை வழக்கில், அமைச்சர்‌ உறவினர் வீட்டில் ஓட்டுநராக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சிவகுமார் -ஜெயந்தி தம்பதியினர்.கடந்த 18ஆம் தேதி ஜெயந்தியை காணவில்லை என சிவகுமார் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் பகுதியில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கால்வாயில் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாக்குமூட்டையில் பெண் சடலம் இருந்ததால் அப்பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்து காவல்துறைக்கு வந்த புகாரை ஆராய்ந்தனர். இதனையடுத்து இதுகுறித்து சிவகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விசாரணையில் அது காணாமல் போன ஜெயந்தி என்பது தெரியவந்தது.இதனையடுத்து அவரது கணவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

இதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் வீட்டில் ஜெயந்தி வீட்டு வேலை செய்து வந்ததும் அங்கு ஒட்டுநராக வேலை பார்த்து வரும் மணிவேல் என்பவருக்கு பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணிவேலை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். விசாரணையில் அவர் ஜெயந்தியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ஜெயந்தியுடன் உறவுகொள்ள முயன்றதாகவும் அவர் ஒத்துழைக்காததால் நைலான் கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக தெரிவித்தார்.

மேலும் அவர் அணிந்திருந்த 4சவரன் நகையை திருடியதையும் ஒப்புக்கொண்டுள்ளார். கொலை செய்த பின்னர் அவரது உடலை சாக்குப்பையில் கட்டி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று குளத்தேரி சாக்கடை கால்வாயில் வீசி சென்றதாகவும் மணிவேல் ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து, மணிவேலை கைது செய்த காவலர்கள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.இச்சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.