இறந்தவர் புதியதலைமுறை
தமிழ்நாடு

கோவை|நொய்யல் ஆற்றின் கரையில் சடலமாக வார்டு கவுன்சிலர் மீட்பு - வழக்கை யார் விசாரிப்பது என குழப்பம்!

கோவை மாநகராட்சியின் 56-வது வார்டு கவுன்சிலரும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான கிருஷ்ணமூர்த்தி நேற்றிரவு பட்டணம் புதூர் அருகே நொய்யல் ஆற்றின் கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.

PT WEB

செய்தியாளர் : பிரவீண்

திரையுலகத்தையே அதிரவைத்த ஜெய்பீம் படத்தை நினைவுப்படுத்துவது போல, கோவை அருகே நொய்யல் ஆற்றங்கரையில் மாநகராட்சி வார்டு கவுன்சிலரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் வழக்கை யார் விசாரிப்பது என இரு காவல் நிலைய போலீசார் இடையே குழப்பம் எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சியின் 56-வது வார்டு கவுன்சிலரும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான கிருஷ்ணமூர்த்தி நேற்றிரவு பட்டணம் புதூர் அருகே நொய்யல் ஆற்றின் கரையில் சடலமாக மீட்கப்பட்டார். சூலூர் மற்றும் சிங்காநல்லூர் என இரு காவல் நிலைய எல்லையில் கிருஷ்ணமூர்த்தியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் வழக்கை யார் விசாரிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது.

எனினும் சூலூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் நொய்யல் பாலத்தின் அருகே தனது காரை நிறுத்திவிட்டு நடந்து சென்றபோது, கால் வழுக்கி சுமார் 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக சூலூர் போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தி மது அருந்தியிருந்ததாகவும், இச்சம்பவம் நடந்தபோது அவருடன் வேறு யாரும் இருந்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடம் இரு காவல் நிலைய எல்லைப் பகுதியில் உள்ளதால் வழக்கை யார் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், இந்த வழக்கினை சிங்காநல்லூர் போலீசாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சூலூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கிருஷ்ணமூர்த்தியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தங்கராமன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.