சூலூர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சிறுமி மாயம் முதல் கொலை வரை.. கோவையை உலுக்கிய சம்பவம்.. கைது செய்யப்பட்ட 2 பேர் யார்?

இதனிடையே உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சூலூர் காவல்நிலையம் முன்பு விடிய விடிய சாலை மறியல் மேற்கொண்டனர்.

PT WEB

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு உதவியதாக அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

செய்தியாளர்: பிரவீண்குமார்

சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ஆம் தேதி காணாமல் போனதாக பெற்றோர் அளித்த புகாரின் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கண்ணம்பாளையம் பகுதியில் குளக்கரையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் கொண்டு மேற்கொண்ட விசாரணையில் 2 பேரைப் பிடித்தனர். இதனிடையே உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சூலூர் காவல்நிலையம் முன்பு விடிய விடிய சாலை மறியல் மேற்கொண்டனர்.

அவர்களுடன் TVK சூலூர் தொகுதி MLA சுகுமார், காவல்துறை உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். காலை 7 மணிக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் குற்றவாளிக்கு கொடுக்கப்படும் தண்டனை தமிழ்நாட்டில் இனி இதுபோல நடக்காத அளவிற்கு இருக்கும். காவல்துறையினர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர் என தெரிவித்தனர்.

இருப்பினும் போராட்டம் தொடர்ந்தது. பெண்ணின் உறவினர்களை ஒலிபெருக்கியில் பேச வைத்து சாலை மறியலை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இதனை தொடர்ந்து மேற்கு மண்டல ஐ. ஜி. ரம்யா பாரதி நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உறவினர்கள் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே பிடிபட்ட 2 பேரிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் அண்டை வீட்டில் வசிக்கும் 33 வயது இளைஞர் கார்த்திக் என்பவர் சிறுமியை கடத்தி சென்று கொலை செய்தது வாக்குமூலம் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். கார்த்திக்கு உதவியதாக அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் கைது செய்து காவல்தறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.