பணம் தொலைந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் நடத்திய விசாரணையால் மன உளைச்சல் ஏற்பட்டு கோவை தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், வழக்கமான முறையில்தான் விசாரித்ததாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த அனுப்பிரியா என்பவர் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி பயின்று வந்த மாணவி, நேற்று மாலை மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின. அனுப்பிரியா மற்றும் சக மாணவ- மாணவிகள், கல்லூரிக்கு சொந்தமான மருத்துவமனையில் பயிற்சியில் இருந்த போது, 1,500 ரூபாய் பணம் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அனுப்பிரியா உள்ளிட்டோரிடம் கல்லூரி முதல்வர் மணிமொழி மற்றும் ஆசிரியர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனால், மனமுடைந்த அனுப்பிரியா தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த விஷயம் தொடர்பாக பேசிய சக மாணவர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் விசாரணையின் போது நடத்திய விதமும், பேசிய வார்த்தைகளுமே அனுப்பிரியாவின் தற்கொலைக்கு காரணம் என குற்றம்சாட்டினார்.
எப்போதுமே கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கடுமையாகவே நடந்து கொள்வார்கள் என மாணவர்கள் கூறினர். அனுப்பிரியாவின் தற்கொலை செய்தி அறிந்து வந்த அவரது தாய், உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள், கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இந்த விவகாரத்தில் கல்லூரி முதல்வர் மணிமொழி மற்றும் ஆசிரியர்களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும், மாணவியின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் மணிமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பேசிய அவர், இது வழக்கமான விசாரணைதான் என்றும், சம்பந்தப்பட்ட மாணவியை நாங்கள் குற்றவாளி எனக் கூறவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.
புகாரின் பேரிலேயே விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறிய கல்லூரி முதல்வர் மணிமொழி, இதில்யாரும் விதிமீறலில் ஈடுபடவில்லை எனக் குறிப்பிட்டார். கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சூழலில், அனைத்து தரப்பிடமும் உரிய முறையில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதே மாணவியை இழந்துவாடும் பெற்றோர் மற்றும் சக மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியதை தொடர்ந்து மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.