கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மூவர் உயிரிழந்தது, நிர்பந்தப்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம் என்று தெரியவந்துள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நகைப்பட்டறை வைத்திருப்பவர் ரவிசங்கர். ரசாயன கழிவு தேக்கி வைக்கப்பட்டிருந்த தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். அந்த பட்டறையில் பணியாற்றி வரும் ஏழுமலை, கவுரிசங்கர், சூரியா ஆகியோரை பட்டறை உரிமையாளர் ரவிசங்கர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கூறியதாக தெரிகிறது. அதனால், நள்ளிரவில் ரசாயன கழிவுநீர் தொட்டியை மூவரும் சுத்தம் செய்துள்ளனர். இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் விஷவாயு தாக்கியதில் ஏழுமலை, கவுரிசங்கர் மற்றும் 19 வயது இளைஞர் சூரியா ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
விஷவாயு தாக்கி உயிரிழந்த மூவரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. முன் அனுபவம் இல்லாதவர்களை ரசாயன கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த நிர்பந்தித்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உயிரிழந்தவர்களின் உடலை வாங்கப்போவதில்லை என்றும் அவர்களது உறவினர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து நகைப்பட்டறை உரிமையாளர் ரவிசங்கர் மீது ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான நகைப்பட்டறை உரிமையாளர் ரவிசங்கரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.