கோவையில் தேநீர் கடைக்கு சீல் வைத்ததால், உணவு பொருட்கள் வீணாகி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கடையில் பகுதி நேர ஊழியர்களாக பணியாற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனியார் தேநீர் கடை செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் இந்த தேநீர் கடையில் அதிகளவில் வாடிக்கையாளர்கள் இருந்ததாக கூறி 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அப்பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், மீண்டும் அதிகளவு கூட்டம் இருந்ததை காரணம் காட்டி கடைக்கு சீல் வைத்தனர். இதனால், அந்த கடையில் பணிபுரியும் ஊழியர்கள், கடையின் வாடகைக்கு சிறு கடை போட்ட இளைஞர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.
இரு தினங்களுக்கு முன்பாக அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று வந்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்ததுடன், கடையை திறப்பது குறித்து தெளிவான பதில் அளிக்கவில்லை என்றும், இதனால் இங்கு பணிபுரியும் 35க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பணி இழப்பு ஏற்பட்டதாக கூறும் கடையின் உரிமையாளர், விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள தின்பண்டங்கள் அனைத்தும் வீணாகி விட்டதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் பகுதி நேர வேலையாக இந்த கடையில் சிறு கடையை போட்டும், கடையில் ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர். இதில் வரும் வருமானத்தை கொண்டே கல்லூரி செலவுகளை சமாளிக்க வேண்டிய சூழலில், அதிகாரிகளின் இந்த நடவடிக்கை தங்களை கடன் சுமைக்கு ஆளாக்குவதுடன், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் வணிக வளாக பகுதிகளில் அதிகளவு கூட்டம் சேரும் பகுதிகளில் அதிகாரிகள் போதிய நடவடிக்கைகள் எடுக்காமல், கடைகளை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுப்பது ஒருதலை பட்சமாக இருப்பதுடன், இது கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆகாது எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.