கைது செய்யப்பட்ட மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள்
கைது செய்யப்பட்ட மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள்  file image
தமிழ்நாடு

கோவை: மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு வீசப்பட்ட மனித மலம்.. ஒப்பந்ததாரர்கள் கைது!

PT WEB

கோவை ஒண்டிபுதூர் 56வது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி (61). இவர் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடத்தை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (60) என்பவருக்குச் சுத்தம் செய்ய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொது கழிவறையைச் சரியாகச் சுத்தம் செய்யாமலும், பராமரிக்காமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணம் மட்டும் வசூலிக்கப்படுவதாக மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகள்

இந்தநிலையில், மாநகராட்சி ஆணையாளர், ஒப்பந்ததாரர் ராதாகிருஷ்ணனிடம் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பினார். நோட்டிசுக்கு எந்த வித பதிலும் ராதாகிருஷ்ணன் அளிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல கூட்டத்தின் போது இது குறித்து மீண்டும் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் மற்றொரு ஒப்பந்ததாரரான பிரகாஷ்(39) என்பவருடன் சேர்ந்து இருகூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு மனித மலத்தை வீசி சென்றுள்ளனர். இது குறித்து பிரகாஷிடம் கேட்டபோது, கிருஷ்ணமூர்த்தியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தி சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பிரகாஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணமூர்த்தியின் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு மனித மலத்தை வீசி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.