கோவை நவஇந்தியா அருகே உள்ள ஒரு தனியார் கட்டுமானப் பகுதியில் தகரங்களால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடியிருப்புகளில் 200-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தவகையில், இன்று அவர்கள் வழக்கமாக பணிக்குச் சென்றனர்.
இந்தச்சூழலில் தான், அந்த குடியிருப்பில் சிலிண்டர் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து வெடிப்பு சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். எனினும், 20 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனைக் கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள் அவசர அவசரமாக வெளியேறிவிட்டனர்.
இதனால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், தொழிலாளர்களின் வீடுகளில் இருந்த உடமைகள் மற்றும் பொருட்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன. தகவல் அறிந்து விரைந்த வடக்கு, தெற்கு, கணபதி மற்றும் பீளமேடு ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அடுத்தடுத்து 20 சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.