தமிழ்நாடு

கோவை: ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு – வனத் துறையினர் விசாரணை

webteam

கோவை அருகே கேரள எல்லையில் ரயில் மோதி பெண் யானை உயிரிழந்த நிலையில், காயமடைந்த குட்டி யானையை வனத் துறையினர் தீவரமாக தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு கோவை வழியாக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், மதுக்கரையில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வரை 12 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக ரயில் பாதை செல்வதால் அவ்வப்போது தண்டவாளத்தை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் வாளையார் கஞ்சிக்கோடு இடையே கொட்டாம்பட்டி என்ற இடத்தில் நேற்றிரவு 17 யானைகள் வந்துள்ளன. இன்று அதிகாலை இந்த யானை கூட்டம், ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது கன்னியாகுமரியில் இருந்து அசாமை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை மீது மோதியுள்ளது. இதில் அந்த யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இந்த விபத்தில் யானை குட்டி ஒன்றுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அது வனத்திற்குள் சென்று விட்டதாகவும் அதனை தேடும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே துறையினருக்கும் வனத் துறையினருக்கும் ரயில் ஓட்டுனர்கள் தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் ரயில் மோதியது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழந்து வருவது வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.