பணி இடமாற்றம் கேட்ட ஓட்டுனர் கண்ணன்
பணி இடமாற்றம் கேட்ட ஓட்டுனர் கண்ணன் PT
தமிழ்நாடு

கோவை: அமைச்சர் கால்களில் குழந்தையை வைத்து பணியிட மாற்றம் கேட்ட ஓட்டுநரின் கோரிக்கை ஏற்பு!

PT WEB

கோவையில் ராமநாதபுரம் - திருச்சி சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று சென்றிருந்தார்.

அப்போது மேடைக்கு ஆறு மாத குழந்தையுடன் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர் கண்ணன் என்பவர், அமைச்சர் காலில் குழந்தையை வைத்து தன் பணி மாறுதல் தொடர்பாக கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக கண்ணன் அமைச்சர் சிவசங்கரிடம், “எனக்கு ஆறு மாத குழந்தை ஒன்றும் ஆறு வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் மனைவி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்துவிட்டார். தேனி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட நான் 2 பெண் குழந்தைகளையும் தாயின் அரவணைப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியவில்லை.

என் பெற்றோருக்கும் வயது முதிர்ந்து விட்டதால் அவர்களை சொந்த ஊரிலிருந்து கோவைக்கு அழைத்து வர இயலாத சூழல் உள்ளது. எனவே எனக்கு சொந்த ஊருக்கு பணி மாறுதல் வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ‘நல்ல தீர்வு காணப்படும்’ என அமைச்சர் பேசி நேற்று வாய்மொழியாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று ஓட்டுனர் கண்ணனின் கோரிக்கை அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது. அவரது கோரிக்கைக்கு இணங்க, ‘நிரந்தர ஒரு வழிமாறுதல்’ அடிப்படையில் திண்டுக்கல் மண்டலம் தேனி கிளைக்கு வழக்கமான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பணியிட மாறுதல் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் உத்தரவிட்டுள்ளது. தற்போது தேனியில் உள்ள கண்ணனை நாளை நேரில் வந்து இட மாறுதலுக்கான ஆணையைப் பெற்றுக் கொள்ளுமாறு துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.