AIADMK meeting  X
தமிழ்நாடு

வானதி சீனிவாசன் முதல் வேலுமணி வரை.. கொங்கு கோட்டையில் மகுடம் சூடப்போவது யார்?

அதிமுகவின் கொங்கு கோட்டையில் வாக்கு வேட்டை 2026 தமிழக தேர்தலில் யாருக்கு என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

PT WEB

கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளையும் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. இம்முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2.0 வியூகமும் அதிமுகவின் கொங்கு கோட்டை என்ற பிம்பமும் மோதிக்கொள்வதால், கோவை மாவட்டத் தேர்தல் களம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தெற்குத் தொகுதி; கோவை மாவட்டத்தின் இதயமாகத் திகழும் கோவை தெற்குத் தொகுதி, பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் வசம் உள்ளது. தெலுங்கு பேசும் மக்கள், தேவாங்கர் செட்டியார் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள இந்தத் தொகுதியில் சுமார் ஒரு லட்சத்து எழுபத்தொன்பதாயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனுடனான கடும் போட்டியில் ஆயிரத்து எழுநூற்று இருபத்தெட்டு வாக்குகள் வித்தியாசத்தில் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார்

Vanathi Srinivasan

கோவை வடக்குத் தொகுதி ; இத்தொகுதியைப் பொறுத்தவரை தற்போது அதிமுகவின் அம்மன் அர்ஜுனன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இரண்டு லட்சத்து எழுபத்தெட்டாயிரம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில், கவுண்டர் மற்றும் போயர் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். மருதமலை முருகன் கோயில் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இத்தொகுதி, அதிமுகவின் வலுவான கோட்டையாகக் கருதப்படுகிறது

சிங்காநல்லூர் தொகுதி ; தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த சிங்காநல்லூர் தொகுதியில் சுமார் இரண்டு லட்சத்து ஐம்பத்து நான்காயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த முறை அதிமுகவின் கே.ஆர்.ஜெயராம் இங்கு வெற்றி பெற்றார். நாயுடு சமூக மக்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ள நிலையில், சிறு மற்றும் குறு தொழில்களின் தேவைகளே இங்கு பிரதான தேர்தல் கோரிக்கையாக ஒலிக்கின்றன.

SP Velumani

தொண்டாமுத்தூர் தொகுதி ; முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெற்றி பெற்ற வி.ஐ.பி தொகுதியாகத் தொண்டாமுத்தூர் விளங்குகிறது. இரண்டு லட்சத்து எழுபத்திரண்டாயிரம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் கவுண்டர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், அருந்ததியர் மற்றும் ஒக்கலிக கவுடர்கள் அடுத்தடுத்த நிலையிலும் உள்ளனர். பேரூர் ஆதீனம் மற்றும் கோவை குற்றாலம் ஆகியவை இத்தொகுதியின் முக்கிய அடையாளங்களாகும்.

கவுண்டம்பாளையம் தொகுதி ; கோவை மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகக் கவுண்டம்பாளையம் திகழ்கிறது. சுமார் மூன்று லட்சத்து எழுபத்தேழாயிரம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவின் அருண்குமார் ஆவார். ஐடி நிறுவனங்கள் நிறைந்த சரவணம்பட்டி மற்றும் மத்திய போலீஸ் பயிற்சி மையம் இங்குள்ளன. வேளாளக் கவுண்டர்கள் மற்றும் அருந்ததியர் சமூகத்தினர் இங்கு வெற்றித் தோல்வியைத் தீர்மானிக்கின்றனர்.

சூலூர் தொகுதி ; விவசாயம் சார்ந்த தொகுதியான சூலூரில் இரண்டு லட்சத்து தொண்ணூற்று மூவாயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அதிமுகவின் வி.பி.கந்தசாமி இங்கு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். விமானப்படைத் தளம் அமைந்துள்ள இத்தொகுதியில் கவுண்டர் மற்றும் தேவர் சமூக மக்களின் வாக்குகள் வெற்றியை உறுதி செய்கின்றன.

பொள்ளாச்சி தொகுதி ; தென்னை விவசாயம் மற்றும் நார் தொழிற்சாலைகள் நிறைந்த பொள்ளாச்சி தொகுதி அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் வசம் உள்ளது. ஒரு லட்சத்து தொண்ணூற்றாராயிரம் வாக்காளர்கள் உள்ள இங்கு கவுண்டர் மற்றும் செட்டியார் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். பசுமை நிறைந்த ஆனைமலை வனப்பகுதி இத்தொகுதியின் சிறப்பம்சமாகும்.

Pollachi Jayaraman & EPS

கிணத்துக்கடவு தொகுதி ; கிணத்துக்கடவு தொகுதியில் இரண்டு லட்சத்து எண்பத்து மூவாயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதி தற்போது அதிமுகவின் தாமோதரன் வசம் உள்ளது. தக்காளி மற்றும் தென்னை விவசாயம் இங்கு பிரதான தொழிலாகும்.

வால்பாறை தொகுதி ; கோவை மாவட்டத்தின் ஒரே தனித்தொகுதியாக வால்பாறை உள்ளது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் புகலிடமான இங்கு ஒரு லட்சத்து அறுபத்து எட்டாயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அதிமுகவின் அமுல் கந்தசாமி மறைந்துவிட்டார். இங்கு தொண்ணூறு சதவீத மக்கள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

AIADMK meeting

மேட்டுப்பாளையம் தொகுதி ; நீலகிரியின் நுழைவாயிலான மேட்டுப்பாளையம் தொகுதியில், அதிமுகவின் ஏ.கே.செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இரண்டு லட்சத்து அறுபத்தொன்பதாயிரம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் வற்றாத பவானி ஆறும், வாழை விவசாயமும் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளன. வன்னியர், கவுண்டர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் இங்கு பரவலாக உள்ளன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தின் பத்து தொகுதிகளையும் அதிமுக கூட்டணியே முழுமையாகக் கைப்பற்றியது. இம்முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2.0 வியூகமும், அதிமுகவின் கொங்கு கோட்டை என்ற பிம்பமும் மோதிக்கொள்வதால் கோவை மாவட்ட தேர்தல் களம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது