தமிழ்நாடு

நுழைவுக் கட்டணத்தில் மோசடி... ரூ.35 லட்சத்துக்கு மேல் மோசடி செய்ததாக வனவர் சஸ்பெண்ட்

webteam

கோவை குற்றாலம் நுழைவுக் கட்டணத்தில் மோசடி செய்ததாக வனவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரிடமிருந்து ₹35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் கோவை குற்றாலத்தில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்கள் பண்டிகை தினங்களில் அளவிற்கு அதிகமான மக்கள் வந்து செல்வர். அங்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 60 ரூபாயும் குழந்தைகளுக்கு 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், இருசக்கர வாகன நிறுத்தத்திற்கு ரூ.20-ம் கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.50-ம் வசூல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலி ரசீது வழங்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கோவை குற்றாலம் நுழைவுக் கட்டண மோசடியில் ஈடுபட்டதாக போளுவாம்பட்டி வனவர் ராஜேஷ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவரிடமிருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் வனச்சரகர் சரவணனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.