தமிழ்நாடு

பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..!

பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..!

Rasus

கல்லூரி வகுப்பறையில் பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் முதலாம் ஆண்டு மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவை அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ வரலாறு முதலாம் ஆண்டு பயிலும் மாணவி மாலதி. இவர் கடந்த மாதம் 28-ஆம் தேதி கல்லூரி மைதானத்தில் மாணவ மாணவிகளுடன் பகக்சிங் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அப்போது பகத்சிங் தொடர்பான உரையாடல்களும் நடந்துள்ளன. இந்நிலையில் பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடியதால் மாணவி மாலதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எம்ஏ முதலாம் ஆண்டு பயிலும் மாணவி மாலதியை மட்டும் சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் முதல்வர் சித்ரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ எம்ஏ வரலாறு முதலாம் ஆண்டு பயிலும் மாலதி கடந்த 28-09-2018 அன்று பல மாணவர், மாணவிகளை அழைத்து கல்லூரி வளாகத்தில் தனியாக கூட்டம் நடத்தியுள்ளார். இக்கூட்டம் நடத்த கல்லூரி முதல்வரிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட பின்பும் பிற மாணவ- மாணவிகளை அழைத்து கூட்டம் கூட்டி கல்லூரியின் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தி ஒழுங்கீனமாக நடந்துகொண்டார். எனவே இதுதொடர்பான விசாரணை அறிக்கை பெறப்படும் வரை 01-10-2018-லிருந்து மாணவி மாலதி இடைநீக்கம் செய்யப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வர் சித்ரா இதுகுறித்து மேலும் கூறும்போது,“ முறையான அனுமதி வாங்காமல் மாணவர்களை ஒன்று திரட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. பகத்சிங் குறித்த உரையாடலின் போது கல்லூரியின் நிறை குறைகள் பற்றி பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.