NIA raid
NIA raid pt desk
தமிழ்நாடு

கோவை கார் வெடிப்பு சம்பவம்: சென்னை, கோவை, தென்காசியில் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

webteam

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு நடைபெற்ற கார் வெடிப்பில் ஜமிஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பான விசாரணையின் பின்னணியில் ஐஎஸ் அமைப்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் 13வது நபராக கொச்சி சிறையில் இருந்த அசாருதீன் என்பவர் கைது செய்யப்பட்டார். கார் வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜமிஷா மூபின் கோவை உக்கடம் பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் படித்தவர் என்பது தெரியவந்தது.

NIA raid

கோவை:

கடந்த மாதம் அரபிக் கல்லூரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் புதிய வழக்கை பதிவு செய்து அதன் அடிப்படையில் சென்னை மற்றும் கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை அரபிக் கல்லூரியில் படித்த நபர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு கோவையில் 22 இடங்களிலும் சென்னையில் மூன்று இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கோவையில் உக்கடம், ஜிஎம்.நகர், போத்தனூர், கரும்புக்கடை, ஆர்எஸ்.புரம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகள் நடைபெற்று வருகிறது. இதில் 82வது வார்டு திமுக கவுன்சிலர் முபசீரா வீட்டிலும், திமுக இளைஞரணியில் உள்ள தமீம் அன்சாரி என்பவரது வீடு மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள இப்ராஹிம் என்பவரது வீடு உட்பட பல்வேறு நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

NIA raid

சென்னை:

சென்னையில் மூன்று இடங்களில் சோதனை என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பிஸ்மில்லா தெருவில் புகாரி என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

அதேபோல் திரு.வி.க.நகர் காமராஜர் தெருவில் வசிக்கும் முஜிபுர் ரகுமான் என்பவரது வீடு மற்றும் அயனாவரம் மயிலப்பன் தெருவில் வசிக்கும் முகமது ஜக்ரியா ஆகியோரது வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியிலும் என்ஐஏ அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடையநல்லூர் பகுதியில் உள்ள முகமது இத்ரீஷ் என்பவரது வீட்டில் இன்று காலை 6 மணி முதல் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.