தமிழ்நாடு

நடிகைன்னதும் நம்பிட்டாங்களே: அழகு கலை பெயரில் மோசடி

நடிகைன்னதும் நம்பிட்டாங்களே: அழகு கலை பெயரில் மோசடி

webteam

கோவையில் சர்வதேச அளவில் அழகுக்கலை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி சுமார் ரூ. 10 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

கோவை ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் சர்வதேச அளவில் அழகுக்கலை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்துவதாக இணையதளம் மூலம் கடந்த மாதம் விளம்பரம் வந்தது. அதைப் பார்த்து பல பெண்கள் பதிவு செய்திருந்தனர். பிரபல அழகுக்கலை நிபுணரும், நடிகையுமான ஓஜாஸ் ரெஜானி இதில் பங்கேற்று தன் அனுபவம், தொழில் நுணுக்கங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளதாக விளம்பரத்தில் குறிப்பிட்டதன் அடிப்படையில், கோவை, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, கேரள, பெங்களூர், ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பெண்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு நேற்று வந்தனர். ஓவ்வொரு பெண்களும் ரூ.1500 முதல் ரூ.3000 வரை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கூறிய வங்கி கணக்கில் ஏற்கனவே செலுத்தி இருந்தனர்.

நடிகை ஓஜாஸ் ரெஜானிக்கு கூறியப்படி தொகையை வழங்காததால் அவர் பாதியில் சென்றுவிட்டார். இதன் பிறகே, நிகழ்ச்சி நடத்திய நிறுவனம் மோசடி செய்தது அந்தப் பெண்களுக்குத் தெரியவந்தது. உடனே அங்கிருந்த ஊழியர்களை சூழ்ந்துக்கொண்டு நிகழ்ச்சிக்காக செலுத்திய தொகையை தரும்படி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான சரண்யா என்பவர் இதேபோன்று சென்னையில் நிகழ்ச்சி நடத்தி மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கிடையே ஒவ்வொருக்கும் அவர்கள் செலுத்திய தொகையில் இருந்து ஒரு பகுதி வழங்கப்படும் என்று கூறியதால் பெண்கள் சமாதானமாகினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சரண்யா உட்பட 3 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் விசாரித்து வருகின்றனர்.