தமிழ்நாடு

கோவை வெடி விபத்து - கைதானவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

Sinekadhara

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 23-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைபெற்ற கார் வெடி விபத்தில் ஜமீசா முபின் உடல் கருகி பலியானார். இதனை அடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டதை அடுத்து புலன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல்துறை ஒன்பது தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே விசாரணையின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு கோவை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு இன்னும் தேசிய முகமைக்கு மாற்றப்படாத நிலையில், தேசிய முகமை அதிகாரிகள் நள்ளிரவு கோவைக்கு வந்துள்ளதாகவும், வழக்கு அவர்களிடம் ஒப்படைக்க வாய்ப்பிருப்பதாக தற்போதைய விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் பலதரப்பட்ட தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.