தமிழ்நாடு

கோவை: பச்சாபாளையம் ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

கோவை: பச்சாபாளையம் ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

kaleelrahman

பச்சாபாளையம் ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் 8,40,000 ரூபாய் கைப்பற்றப்பட்டது.

கோவை பச்சாபாளையம் பகுதியில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரிந்து வருபவர் சீனியர் பேக்டரி உதவியாளர் கிருஷ்ண மூர்த்தி. இவர், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்யவும், பலரது சம்பள நிலுவைத் தொகையை திரும்பப் பெறவும் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்நிலையில், பச்சாபாளையத்தில் செயல்பட்டு வரும் ஆவினில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவை பணம் தர நீதிமன்றம் மூலம் உத்தரவு வந்தது. ஆனால் இந்த நிலுவை பணத்தை தொழிலாளர்கள் பெறமுடியாமல் அங்குள்ள அதிகாரிகள் சிலர் காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் நிலுவை பணத்தை பெறவிருக்கும் பயனாளிகளிடம் பாதியை எங்களுக்கு தரவேண்டும் என ஒப்புதல் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக தொழிலாளர்களிடம் வெற்று காசோலைகளை பெற்றுக் கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு வந்த நிலுவைத் தொகையில் பாதியை எடுத்துக் கொண்ட நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு சென்றதை அடுத்து விஜிலன்ஸ் அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர்.

அவர் ஓட்டிச் சென்ற காரில் இருந்து ₹5,90,000 மற்றும் அலமாரியில் இருந்து ₹2,50,000 என மொத்தம் 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் சிக்கிய கிருஷ்ணமூர்த்தி மீது அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பலரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு கட்டுப் படாவிட்டால் யாராக இருந்தாலும் அவரை மாற்றி விடக்கூடிய பலம் பொருந்தியவராக திகழ்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டால் அங்கு பணிபுரியும் மேலதிகாரிகள் மூலம் வெளிச்சத்திற்கு வரும் என சொல்லப்படுகிறது.