தமிழ்நாடு

கோவை: கை எம்பிராய்டரி மூலம் பாரதியாரின் படத்தை உருவாக்கி உலக சாதனை

kaleelrahman

பாரதியாரின் உருவம் மற்றும் கவிதைகளை ஒரு மணி நேரம் இருபத்தைந்து நிமிடங்களில் 25 பேர் இணைந்து தனித்தனியாக 25 சதுர அடியில் கை எம்பிராய்டரி மூலம் உருவாக்கி உலக சாதனை படைத்தனர்.

கோவையைச் சேர்ந்த பிரபா செந்தில்குமார் என்பவர் தையல் எம்பிராய்டரி, ஓவியம், நடனம், இசை என பன்முக திறன்களை கற்பித்து, கல்வியோடு கைத்தொழில்களை ஊக்குவிக்கும் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார்.

அவரது தலைமையில், கை எம்பிராய்டரில், மகாகவி பாரதியார் எனும் தலைப்பில் ஐந்து வயது குழந்தை முதல் 60 வயது பெரியவர்கள் வரை 25 பேர் கொண்ட குழுவினரை வைத்து பாரதியாரின் உருவத்துடன், அவரது வாசகங்களை தனித்தனியாக 25 சதுர அடியில் வடிமைக்கும் சாதனை நிகழ்வு கோவை காந்தி பார்க் பகுதியில் நடைபெற்றது.

இதில், பங்கேற்ற ஒவ்வொருவரும், தனித்தனியாக தலைப்பாகை அணிந்த பாரதியின் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கினர். 1மணி நேரம் 25 நிமிடங்களில் கை எம்பிராய்டரில் செய்த இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. கை எம்பிராய்டரில் சாதனை செய்த 25 பேர் கொண்ட குழுவினருக்கு, நோபல் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.