பெண்களுக்கு எதிரான குற்றம் PT
தமிழ்நாடு

கோவையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை | ”மாணவி மகள் போன்றவர் இல்லையா?” - இபிஎஸ் கண்டனம்

கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், இன்சாட் வலைதளத்தின் மூலம் சில கல்லூரி மாணவர்களுடன் பழகி வந்துள்ளார்.

Jayashree A

கோவையில் சமூக வலைதளம் மூலம் பழகி, 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை....

சமூக வலைதளங்கள் அதிகரித்து வரும் அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகிறது. கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், இன்சாட் வலைதளத்தின் மூலம் சில கல்லூரி மாணவர்களுடன் பழகி வந்துள்ளார். கல்லூரி மாணவர்கள் தங்களின் இருப்பிடத்திற்கு சிறுமியை அழைத்ததின் பேரில் சிறுமி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாணவர்கள் தங்கிய அறைக்கு தனியாக சென்றுள்ளார்.

இந்நிலையில், சிறுமி அன்று வீடு திரும்பாதநிலையில், சிறுமியின் பாட்டி, சிறுமி காணாவில்லை என்று உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமி குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் புகார் அளிக்கப்பட்ட மறுநாளே காணாமல் போன சிறுமி வீடு திரும்பி உள்ளார்.

மாதிரிப்படம்

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அதிர்ச்சி தகவல் வெளியானது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சமூக வலைத்தளம் மூலம் தனக்குப் பழக்கமான 7 இளைஞர்கள் குனியமுத்தூர் பகுதிக்கு வரவழைத்தனர். அங்கு அறை எடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உக்கடம் போலீசார் 7 மாணவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தினர். கோவையில் 17 வயது சிறுமி ஒரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

”சிறுமிகளுக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது ”என தெரிவித்துள்ளார்.

மேலும், ”குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம் என்று சொல்லும் முதல்வர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

தனக்கு தானே அப்பா என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா? இவரின் பாதுகாப்பு பரிபோனதற்கு யார் பொறுப்பு ? பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக துறந்துவிட்டு, விளம்பர மோகத்தில் இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் கோவை மாணவி பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கண்டனப் பதிவினை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “கோவையில், 17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதைத்தான் சிறுமிகள் மீதான இது போன்ற கூட்டுப் பாலியல் வன்முறைகள் காட்டுகின்றன.

ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழகத்தில் தினம் தினம் சிறுமிகள், மாணவிகள், பெண் காவலர்கள், பெண் அரசு அதிகாரிகள் என, பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.

குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்றால், அவனைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்தி விட்டு, வீண் விளம்பரத்துக்காக அப்பா, அண்ணன் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன் என்பதை முதலமைச்சர் திரு @mkstalin கூறுவாரா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், “கோவைப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிற விவகாரத்தில் குற்றத்தோடு தொடர்புடைய 7 மாணவர்கள் உடனடியாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனையை திராவிட மாடல் அரசு பெற்றுத்தரும். பெண்கள் மீதான குற்றங்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து பெண்களைப் பாதுக்காக்கவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சட்டங்களை கடுமையாக்கியுள்ளார்!

தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வின் காரணமாகவும், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கையாலும் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்கள் மீதான வன்முறைகளை தடுப்பதற்கான திராவிட மாடல் அரசு எடுக்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை நாட்டு மக்கள் அறிவார்கள்.

பெண்களைப் படிக்கவிடாமல் அச்சுறுத்த வேண்டும் எனும் சிறுபுத்தியோடு பழனிசாமி முன்னெடுத்த விஷமப் பிரச்சாரம் திராவிட மாடல் அரசின் துரித நடவடிக்கைகளால் பிசுபிசுத்துபோனது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது உறுதியான நடவடிக்கை எடுத்துவரும் தமிழ்நாடு அரசை நேற்றைய தினம் உயர்நீதி மன்றமே பாராட்டியுள்ளது.

பெண்களை பாதுக்காப்பதில் சிறிய சமரசத்திற்கும் முதலமைச்சர் இடம் தரமாட்டார். பெண்களுக்கு முதலமைச்சர் மீது இருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான் ‘அப்பா’ எனும் அன்புச் சொல். அதை உங்களால் பொறுக்கமுடியாதுதான், ஆனால் அதை கொச்சைப் படுத்தும் அற்ப வேலையில் இறங்காமல் ஆக்கப்பூர்வாக செயல் படுங்கள் பழனிசாமி! பெண்களை அச்சுறுத்த நினைத்து அற்ப அரசியல் செய்யாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.