தமிழ்நாடு

அரசுப்பள்ளி கழிவறைக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு: லாவகமாக பிடித்த உடற்கல்வி ஆசிரியர்

kaleelrahman

சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் அரசுப் பள்ளியின் கழிவறைக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பை உடற்கல்வி ஆசிரியர் லாவகமாக பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் கோபால் நாயக்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மாணவர்கள் கழிவறைக்கு சென்றபோது தண்ணீர் குழாய் பகுதியில் கட்டுவிரியன் பாம்பு இருப்பதாக மாணவர்கள் உடற்கல்வி ஆசிரியர் நேருதாஸ் கென்னடி-க்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், கழிவறைக்குள் சென்ற அவர், குச்சியின் உதவியோடு பாம்பை வெளியே வர வைத்து லாவகமாக மீட்டு பின்னர் காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டார். இதேபோல கடந்த 10 தினங்களுக்கு முன்பு பள்ளிக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து அதையும் காட்டுப்பகுதிக்குள் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பள்ளி வளாகத்திற்குள் பாம்பு புகுந்த நிலையில், யாரையும் எதிர்பார்க்காமல் உடற்கல்வி ஆசிரியர் இது போன்ற பணிகளில் ஈடுபட்டது சக ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன் உடற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.