தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி அமைச்சரவையை ஏற்க இயலாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முன்முனைப்போடு செய்துவருகின்றன. இதனிடையே நேற்று சென்னையில் அதிமுகவின் முதல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், நாளை முதல் 31-ஆம் தேதி வரை ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட உள்ளேன்” என்றார்.
மேலும் பேசிய அவர், “ தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி அமைச்சரவையை ஏற்க இயலாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு" என்றார் . பாஜக, அதிமுக கட்சிகளுக்கிடையேயான கூட்டணி குறித்த சலசலப்பு நீடித்து வந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பாஜக-அதிமுக கூட்டணி தொடர்வதாக கூறினார்.