கோஆப்டெக்ஸ்
கோஆப்டெக்ஸ் PT
தமிழ்நாடு

தொடங்கியது தீபாவளி விற்பனை.. பட்டுப்புடவைக்கு உத்திரவாத அட்டையை வழங்குகிறது கோஆப்டெக்ஸ் நிறுவனம்!

PT WEB

பண்டிகைக்காலங்கள் வந்தாலே போதும்.. ஷாப்பிங் செய்வதில் அனைவரும் பிசியாகிவிடுவார்கள். அதிலும், பெண்கள் ஒருபடி மேலேபோய் சந்தைக்கு வந்துள்ள புதிய வரவுகள், எந்த கடையில் ஆஃபர் அதிகம் என்பதையெல்லாம் அலசி பார்ப்பது வழக்கம்.

அந்தவகையில், தேடுபவர்களுக்கான செய்திதான் இது.. கோ ஆப்டெக்ஸ் விற்பனை செய்யும் காஞ்சிப் பட்டு புடவையில் உள்ள சரிகைக்கு தர உத்தரவாத அட்டை வழங்கப்படுகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் இந்த ஆண்டுக்கான தீபாவளி விற்பனை தொடங்கியுள்ளது.

தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் கலைச்செல்வி மோகனும் பட்டுப்புடவையின் சரிகைக்கு உத்தரவாத அட்டை வழங்குவதை கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார். காஞ்சி அசல் பட்டுச்சேலையை நெய்ய பயன்படுத்தப்படும் தங்கம், வெள்ளியின் அளவுகள் குறித்த விவரங்களையும் அதற்கான உத்தரவாத அட்டையையும் சேலையுடன் இணைத்து விற்கப்படுவதாக கோ ஆப்டெக்ஸ் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டுச்சேலை வாங்கிய பல ஆண்டுகளுக்குப் பிறகு அதை பரிசோதித்து பார்த்தாலும், உத்தரவாத அட்டையில் குறிப்பிட்ட அளவு மாறாது எனத் தெரிவித்த விற்பனையாளர்கள், பட்டுப்புடவையுடன் கைத்தறி சேலை நெய்தவரின் புகைப்படங்களும், அதற்கான கால அளவு உள்ளிட்ட விவரங்களும் இதில் உள்ளதாக தெரிவித்தனர். தனியார் விற்கும் பட்டுச்சேலைகளில் விவரங்கள் இல்லாததால், கோ ஆப்டெக்ஸ்க்கு வாடிக்கையாளர்கள் வருகை அதிரித்துள்ளதாக கூறுகின்றனர்.