மோடி - விஜய் Pt web
தமிழ்நாடு

ஒன்றிய அரசு To இந்திய அரசு.. மாறிய முதல்வர் விஜயின் Tone.. பின்னணி என்ன?

பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் ஒன்றிய அரசுக்கு பதில் இந்திய அரசு என கூறப்பட்டுள்ளதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Praveen Joshva L

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர் அதன் தலைவரான விஜய் தனது அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் அறிவித்தார். ஆனால் அதன் பின்னர் அவர் திமுகவை விமர்சித்ததில் ஒரு சதவீதம் கூட அவர் பாஜகவை விமர்சிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது.

திமுகவினர் இதனை மையப்படுத்தி பாஜகவின் பி டீம்தான் தவெக என்று கூறி விமர்சித்து வந்தனர். இந்த சூழலில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார்.

விஜய்

இந்த நிலையில், முதல்வர் விஜய் நெய்வேலி என்.எல்.சி பங்கு விற்பனை முடிவை மறுபரிசீலனை செய்யும்படி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய அரசு என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக தேர்தல் பரப்புரையிலும், கடந்த காலங்களில் எழுதிய கடிதத்திலும் ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டு வந்த முதல்வர் விஜய் தற்போது அதனை இந்திய அரசு என மாற்றியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமீபத்தில் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், எதற்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஒன்றிய அரசுடன் மோதல்போக்கை விரும்புகிறவர்கள் நாம் இல்லை என்றும், நமக்கு எப்போதும் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம். அதேநேரம் அரசியல் ரீதியான கொள்கைகளையோ, மாநில உரிமைகளையோ விட்டுக்கொடுக்க மாட்டோம் என தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே ஒன்றிய அரசு என்ற பார்வை இந்திய அரசு என மாறியுள்ளதாக பார்க்கப்படுகிறது. முன்னர் மத்தியில் ஆளும் அரசை குறிப்பிட மத்திய அரசு என கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் மத்திய அரசு என்பதற்கு பதில் ஒன்றிய அரசு என்ற வார்த்தை ஆளும் தரப்பினரால் பயன்படுத்தப்பட்டது. இதற்கு பாஜகவின் மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இதனிடையே மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு செயல்படும் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது குறிப்பிடத்தக்கது.