தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. தற்போது, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடன் முதல்வர் விஜய் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் வகையிலான திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மேலும், பட்ஜெட்டில் தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் இடம்பெறும் என்று தெரிகிறது. இந்த நிலையில், பட்ஜெட் குறித்து விவாதிக்க முதல்வர் விஜய் தலைமையில் இன்று 2-வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, காலை 10.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அனைத்துத் துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர். தொடர்ந்து, பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுப்பது குறித்தும் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஊழல் மற்றும் லஞ்சம் முறைகேட்டில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படுவதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும், ஆய்வுகளின் போது ரீல்ஸ் எடுத்து அலப்பறை செய்யவேண்டாம் என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.