தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று காவல்துறை-தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ், முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இதைதொடர்ந்து, காவல்துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசினார். அப்போது அவர், ”நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்கள் மீதே பழி போடாமல் முதலமைச்சர் பதில் கூற வேண்டும். திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் சாதிய கொலைகள் குறைந்துள்ளதாக கொள்கை விளக்கக்குறிப்பில் கூறி உள்ளீர்கள். இந்த அரசு அமைந்து 116 நாட்கள் ஆகிறது. இத்தனை நாட்களில் இந்த அரசு புதிதாக கொண்டு வந்த திட்டங்களை விட பெயர் மாற்ற அறிவிப்புகள்தான் அதிகம் வருகிறது. இல்லையெனில், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்கிறீர்கள். விவசாயக்கடன் முழு தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர், பெண்களுக்கு எல்லா பேருந்துகளிலும் இலவசம் என்றீர்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை பாதிப் பாதியாக நிறைவேற்றுவது ஏன்? இதைதயெல்லாம் பார்க்கையில் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம்போல தாய்மாமன் காது குத்தும் திட்டம் என அறிவித்திருக்கலாம். தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாளே இல்லை.
கடந்த ஆகஸ்ட்டில் கோவையில் மட்டும் 9 கொலைகள் நடைபெற்று வருகின்றன. தவெக ஆட்சியில் 10 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. முதலில் ஆணவக் கொலை என்றார்கள். தவெக ஆட்சியில் கெளரவக் கொலை என்றும், காதல் கொலைகள் எனவும் கூறத் தொடங்கிவிட்டனர். உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசுதான். நாங்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் முதலமைச்சர் என்றும் நேரடியாக உடனடியாக பதில் கூறவில்லை. டிவி சீரியலில் இனி இவருக்கு பதில் அவர் என கார்டு போடுவதுபோல குறிப்பிட்ட அமைச்சர்கள் மட்டும்தான் பதில் கூறுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறுவதில்லை” எனக் கடுமையான விமர்சனத்தை வைத்தார். இதற்கு சபாநாயகர் ”திங்கட்கிழமை அன்று உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறப்படும்” விளக்கமளித்தார்.
இதற்கிடையே முதல்வர் விஜய், ”எல்லாத்துக்கும் நான் தெளிவா பதில் சொல்றேன். உங்கள் சார்பாக அவர்களிடம் ஒரு ப்ராமிஸ் கேட்கிறேன். யாரும் எழுந்திருச்சி ஓடிவிடக் கூடாது” என்று கூறிவிட்டு, அவர் அவையில் இருந்து சென்றுவிட்டார். இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டசபையில் இருந்து இப்போது யார் ஓடியது என அனைவருக்கும் தெரியும். 3 நாட்கள் நன்றாக தயாராகிவிட்டு முதலமைச்சர் வரட்டும் என்றுதான் நான் முன்னதாகவே கூறினேன்” என்றார்.
்