Loyola Mani CM Vijay
தமிழ்நாடு

பேச்சாளர் To வாரியத் தலைவர்.. லயோலா மணிக்கு முக்கியப் பதவி.. முதல்வர் விஜய் எடுத்த முடிவு!

தவெகவின் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவரான லயோலா மணிக்கு முக்கிய வாரியத் தலைவர் பதவி வழங்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Praveen Joshva L

தமிழ்நாட்டின் உச்சபட்ச நடிகர்களில் ஒருவராக இருந்த விஜய், சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சியில் பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் இணைந்த நிலையில், சமூகச் செயல்பாட்டாளராகவும், மேடைப் பேச்சாளராகவும் இருந்த லயோலா மணியும் இந்தக் கட்சியில் இணைந்தார்.

ஏற்கெனவே மேடைப் பேச்சாளராக இருந்ததால் தவெகவின் மேடைகளில் லயோலா மணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, கட்சியினர் மத்தியிலும், சமூக ஊடகங்களிலும் லயோலா மணி கவனம் பெற்றார். மேலும் தவெக கட்சி சார்பில் ஊடகங்களிலும் அவர் கட்சியின் நிலைப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.

அந்த வகையில், லயோலா மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாக ’புதிய தலைமுறை’ ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டதற்கான நியமன ஆணையை அந்த துறையின் அமைச்சரான பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில் முதல்வர் விஜய் லயோலா மணியிடம் வழங்கியுள்ளார்.

இந்தச் சூழலில் சட்டமன்றத் தேர்தலில் லயோலா மணிக்கு சீட் வழங்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு கட்சித் தலைமை சீட் ஒதுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து தவெக ஆட்சியைப் பிடித்த நிலையில், கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வாரியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வழங்க தவெக தலைமை திட்டமிட்டு வந்தது. கடந்த திமுக ஆட்சியில் இலக்கியச் சொற்பொழிவாளரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் லியோனி தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடத்திட்டங்களில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்களைக் கவனிப்பது, மாணவர்களுக்கான விலையில்லாப் பொருட்களைக் கொள்முதல் செய்து உரிய நேரத்தில் அது சென்றடைகிறதா என்பதைக் கண்காணிப்பது போன்றவை பாடநூல் கழகத் தலைவரின் முக்கியப் பணிகளாகும்.