பணி நியமன ஆணைகள் Pt web
தமிழ்நாடு

கரூர் துயரம் | 31 பேருக்கு அரசுப் பணி.. நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்!

தவெக பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணிக்கான ஆணையை முதல்வர் விஜய் இன்று வழங்கியுள்ளார்.

Premkumar S

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய் கலந்துகொண்ட தேர்தல் பரப்புரையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்திருந்தனர். இச்சம்பவம் தமிழம் முழுவதையும் பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது. தவெக தொடங்கப்பட்டு அந்த சமயத்தில், 2 ஆண்டுகள் கூட முடியாத நிலையில், தவெகவிற்கு மட்டுமின்றி, தமிழகத்தின் காலக்கோட்டில் ஒரு கருப்புப் பக்கமாக மாறியிருக்கிறது கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம்.

கரூர் கூட்டநெரிசல் சம்பவம்

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக தரப்பில், 20 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, உயிழந்தவர்களின் குடும்பங்களை சென்னைக்கு அழைத்து சந்தித்தார் விஜய். அப்போது, பாதிக்கப்பட்டவர்களில் கால்களில் விழுந்து அவர், மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியானது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் இடங்களுக்கு சென்று ஆறுதல் கூறாமல், தன்னுடைய இடத்திற்கு அழைத்து சந்தித்தை பல்வேறு கட்சியினரும் விமர்சித்திருந்தனர்.

இத்தகைய சூழலில், தவெக தலைவர் விஜய் தற்போது தமிழகத்தின் முதல்வராக அமர்ந்திருக்கிறார். முதல்வரான பிறகு, கரூர் வருவேன் என விஜய் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இன்று கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.

முன்னதாக, முதல்வர் விஜய் கரூர் செல்லும் போது, தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 36 குடும்பங்களில் 32 குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனினும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணி வழங்குவது அரசின் முடிவு எனத் தெரிவித்ததுடன், இந்த வழக்கு முடியும் வரை தற்காலிக அரசுப் பணி வழங்கலாம் என தீர்ப்பளித்தது.

CM Vijay

இதனைத் தொடர்ந்து, இன்று கரூர் சென்றுள்ள முதல்வர் விஜய், சாந்தி என்பவர் அரசுப் பணிக்கு செல்ல முடியாத நிலையில், அவரைத் தவிர்த்து 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். அதேசமயம், சாந்திக்கு 10 லட்சம் கருணைத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், அரசுப் பணியை பெற மறுத்தவர்களிடம் காரணங்களையும் கேட்டறிந்துள்ளார் முதல்வர் விஜய். பணி நியமன ஆணை வழங்கும்போது, முதல்வர் விஜய் கண் கலங்கியதாக, பயனாளிகள் தெரிவித்திருக்கின்றனர்.