செய்தியாளர் - M.மீரா
தமிழக முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் விசாரித்தார்.
விஜய் தனது தேர்தல் வேட்புமனுவில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை குறிப்பிட்டிருந்தாலும், ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து ஒன்றை குறிப்பிடவில்லை என்று மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, வேட்புமனுவில் சொத்து விவரங்களில் ஏற்பட்ட தவறு மட்டும் தேர்தல் வெற்றியை ரத்து செய்ய போதுமானதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஒரு வேட்பாளர் தனது அனைத்து சொத்து விவரங்களையும் தானே தயாரிப்பதில்லை என்றும், அதற்காக ஆடிட்டர் அல்லது சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்டின் உதவியை பெறுவார் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். எனவே, ஆடிட்டர் மூலம் ஏதேனும் சொத்து விடுபட்டிருந்தால், அதற்காக மட்டும் தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
நானும் நீதிபதியாக பொறுப்பேற்றபோது, எனது சொத்து விவரங்களை ஆடிட்டர் உதவியுடன் தான் தாக்கல் செய்தேன். அதேபோல் விஜய்யும் தனது சொத்து விவரங்களை ஆடிட்டர் மூலமாகத்தான் தாக்கல் செய்திருப்பார் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும், விஜய் ஏற்கனவே சுமார் ரூ.600 கோடி சொத்துகளை வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்த நிலையில், ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விடுபட்டிருப்பது வாக்காளர்களின் தேர்தல் முடிவை உண்மையில் பாதித்ததா?எ ன்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதனிடையே, விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வேட்புமனுவில் பெரும்பாலான தகவல்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏதேனும் சிறிய தவறுகள் இருந்தாலும் அவை தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கும் அளவுக்கு முக்கியமானவை அல்ல என்றும் வாதிட்டுள்ளார்.
மேலும், சொத்து விவரங்களில் ஏற்பட்டதாக கூறப்படும் தவறுகள் தேர்தல் முடிவை எவ்வாறு பாதித்தன என்பதை மனுதாரர் நிரூபிக்கவில்லை என்றும் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் விஜய்யின் தேர்தல் வெற்றி குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இதுவரை எந்த ரத்து உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மனுவை நிராகரிக்கக் கோரிய விஜய் தரப்பின் மனு மீதான விசாரணை அக்டோபர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.