CM VIJAY  ANI
தமிழ்நாடு

அறிவிப்புகளை வாரி இறைத்த CM விஜய்! MLA-க்களுக்கு அடித்த ஜாக்பாட்.. என்னென்ன சலுகைகள்?

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி காட்டுமன்னார்கோவில் தொகுதியைச் சேர்ந்த விசிக கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதில், “சட்டப்பேரவை கூட்டத்தொடருக்காக சென்னை தலைமைச் செயலகத்திற்கு சுமார் 280 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பயணம் செய்து வருகிறேன். எனக்குச் சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை. வாடகை வாகனத்தில்தான் வந்து செல்கிறேன். மேலும், எனது காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியின் சுற்றளவு சுமார் 40 கிலோமீட்டர் உள்ளது. தொகுதி முழுவதும் மக்களைச் சந்தித்து பணியாற்றுவதற்கு என்னிடம் சொந்தமாக வாகன வசதியும் இல்லை. அதேபோல், ஓர் உதவியாளரை நியமித்து அவருக்கு ஊதியம் வழங்கும் அளவிற்கான பொருளாதார வசதியும் என்னிடம் இல்லை. இதே நிலைமையில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வசதியும், உதவியாளரை நியமித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

cm vijay

இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் விஜய், சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மக்களாட்சியின் மிக முக்கிய தூண்களாக விளங்குபவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள். இந்த முறை சட்டப்பேரவையில் முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைமுறை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொருளாதார வளம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றும் முதல் தலைமுறை சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பணியைத் தொய்வின்றித் தொடரவும், தொகுதிப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ளவும் ஏற்ற வகையில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், வாகனத்திற்கு ஓட்டுநர் நியமிக்கப்படுவதுடன், எரிபொருள் மற்றும் வாகன பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

CM VIJAY

மேலும், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களுக்கென ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ளலாம் என்றும், அதற்காக மாதம் ரூ.25 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதன்பிறகு பேசிய எம்எல்ஏ ஜோதிமணி, தனது கோரிக்கையை நிறைவேற்றியதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். அதன் பிறகு பேசிய மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகம், “தமிழகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் முதல்வர் நமக்குக் கிடைத்திருக்கிறார்” என்ற பெருமையோடு அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கொடுக்கிற காரை இன்னோவா காராகக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பின்னால் இருக்கும் உறுப்பினர்கள் கேட்டதாகத் தெரிவித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலை மூழ்கியது.