அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க காரைக்குடி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பொது மக்களை சந்தித்தார். அதற்காக வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற முதலமைச்சருடன் பொது மக்கள் பலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் மாணவ, மாணவிகள் முதலமைச்சருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர்.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய கல்லூரி மாணவி ஒருவர் “அப்பா ரொம்ப நன்றி” என்றார்.
மற்றொரு மாணவி, “நீங்கள் எங்களுக்காக புதுமைப்பெண் திட்டம் கொண்டு வந்திருக்கிறீர்கள். எங்களுக்கு அது மிகவும் உதவியாக இருக்கிறது. நான் முதல்வன் திட்டம் மூலமாக, பல திறமைகளை நாங்கள் வளர்த்து கொள்கிறோம். சமீபத்தில் நீங்கள் தாக்கல் செய்த பெண் பாதுகாப்பு மசோதவை கண்டபின் மிகவும் பெருமையாக இருந்தது. ரொம்பவும் பாதுகாப்பாக உணர்கிறோம். இனிமேல் வெளியில் பாதுகாப்பாக நாங்கள் செல்லலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், இதுகுறித்தான, விடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள, முதலமைச்சர் ஸ்டாலின், ‘உசிரே நீதானே…💗’ என்ற கேப்ஷனையும் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.