Mk Stalin - book release
Mk Stalin - book release  @mkstalin, Twitter
தமிழ்நாடு

“அகழாய்வு பொருட்களின் நிறம் கறுப்பு, சிவப்பாக இருப்பதால் அதை ஏற்க பலருக்கு மனமில்லை”- முதல்வர்

webteam

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய, ‘ஒரு பண்பாட்டின் பயணம் - சிந்து முதல் வைகை வரை’ என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று மாலை நடந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நூலை வெளியிட, முதல் பிரதியை தொழில் துறை, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக்கொண்டார்.

‘ஒரு பண்பாட்டின் பயணம்’ நூல் வெளியீடு

விழாவில் பேசிய முதலமைச்சர், “வைகை கரையில் வரலாற்றைத் தொடங்க வேண்டும் என அண்ணா சொன்னார். அவர் சொன்னதை பாலகிருஷ்ணன் இன்று செய்திருக்கிறார். ஐஏஎஸ் அதிகாரிகளாக இருப்பவர்கள், தொல்லியல் மீது ஆர்வம் இருந்தாலும், ஏதாவது பிரச்னை வந்துவிடுமோ என வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பாலகிருஷ்ணன், ஐஏஎஸ் பணியோடு தொல்லியல் ஆய்வையும் மேற்கொண்டார்.

கருணாநிதி இன்று இருந்திருந்தால், இந்த நூலை பார்த்து அளவில்லா மகிழ்ச்சி அடைந்திருப்பார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியாவில் குஜராத் உள்ளிட்ட இடங்களில் உள்ள இட பெயர்களும், தமிழகத்தில் உள்ள பெயர்களும் ஒத்துப்போகின்றன.

MK Stalin speech

அண்மைகால ஆய்வுகள், தமிழரின் பெருமைகளை மெய்பிப்பதாக இருக்கின்றன. சங்க இலக்கியங்கள் திராவிட மேடைகளில் முழங்கியபோது, ‘அது இலக்கியம்தானே, வரலாறு இல்லையே’ என கூறினர். ஆனால், அது வரலாறுதான் என்பதை பாலகிருஷ்ணன் இப்போது உறுதிபடுத்தி இருக்கிறார். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, தமிழகத்தில் இருந்துதான் எழுத வேண்டும் என கூறி வருகிறேன். அதற்கு சான்றாக இந்நூல் விளங்குகிறது” என புகழாரம் சூட்டினார்.

அகழாய்வு பொருட்களின் நிறம் கறுப்பு, சிவப்புமாக இருப்பதால் அதை ஏற்க பலருக்கு மனம் இல்லை
முதல்வர் ஸ்டாலின்

விழாவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “சிந்துவெளி நாகரிகத்திற்கும், திராவிட நாகரிகத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஏற்கனவே பல நூல்கள் வெளிவந்திருந்தாலும், பாலகிருஷ்ணன் எழுதிய இந்த நூல் பல்வேறு தரவுகளை கொண்டதாக இருக்கிறது.

தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களில் அகழ்வாய்வுகள் நடந்தாலும் கூட, ‘கீழடி ஆய்வு நடக்குமா முடக்கப்படுமா; அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்படும் வரலாறு, தமிழர்களின் பண்பாடா அல்லது வேறு பண்பாடா?’ என பலர் பேசினர். அப்போதெல்லாம் தமிழர் பண்பாட்டை தூக்கி நிறுத்துவதற்கும், காப்பாற்றுவதற்கும் குரல் கொடுத்தவர் தான் தமிழக முதலமைச்சர்.

தமிழக முதலமைச்சர் மிகச் சிறப்பாக கீழடி அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கிறார்.

அகழாய்வுகளை மேற்கொள்வதில், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் தமிழக முதலமைச்சர் அதிக ஆர்வம்காட்டி வருவதோடு, அகழாய்வு நடைபெறும் இடங்களுக்கெல்லாம் செல்கிறார். ஒரு முதலமைச்சர் நேரடியாக சென்று அகழாய்வுகளை பார்வையிடுவது இதுவே முதல் முறை” என்றார்.

விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம், முதல்வரின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.