கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவத்திற்கு தவெக தலைவர் தாமதமாக வந்ததே முக்கிய காரணம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே கூட்டநெரிசலுக்கு காரணம் என காவல்துறை தரப்பிலும், காவல்துறை முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை, காவல்துறையின் அறிவுறுத்தல் படியே நாங்கள் செயல்பட்டோம் என்று தவெக தரப்பும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
தொடர்ந்து கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு தரப்பில் விசாரணை ஆணையமும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக்குழுவும் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதை எதிர்த்து தவெக தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தசூழலில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தவெக தலைவர் தாமதமாக வந்ததே கூட்டநெரிசலுக்கு காரணம் என்றும், உடற்கூராய்வு எப்படி நடத்தப்பட்டது என்றும் விளக்கம் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டபேரவையில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், “கடந்த செப்டம்பர் 27-ம் தேதியன்று கரூரில் தவெக தலைவர் பிரச்சாரத்திற்கு என்று லைட் ஹவுஸ் மற்றும் உழவர் சந்தைக்கு எதிரே அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அங்கு பாதுகாப்பின்மை மற்றும் போக்குவரத்து நேரிசல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் தவெக தரப்பிலிருந்து வேலுச்சாமிபுரத்தில் அனுமதி கேட்கப்பட்ட பிறகு, 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி பாதுகாப்பிற்காக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதற்காக 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 18 ஆய்வாளர்கள், 75 உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 515 காவலர்கள் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதுமட்டுமில்லாமல் கூடுதலாக வெளிமாவட்டத்தில் இருந்து 1 துணை காவல் கண்காணிப்பாளர், 2 ஆய்வாளர்கள், 8 துணை ஆய்வாளர்கள், 60 ஆயுதப்படை காவலர்கள், 20 அதிவிரைவுப் படை காவலர்கள் என 91 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அன்றைய தினம் மொத்தமாக அதிகாரிகள், காவலர்கள் என 606 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
10,000 பேர் கூடுவார்கள் என தவெக தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், பொதுவாக் அரசியல் கூட்டங்களுக்கு கொடுக்கப்படுவதை பிட அதிகப்படியான காவலர்களே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கரூரில் மாலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், அவர்களின் சமூகவலைதளத்தில் 12 மணிக்கே தவெக தலைவர் வந்துவிடுவார் என்று அறிவித்தனர். ஆனால் 12 மணிக்கு வருவதாக சொன்ன தவெக தலைவர் விஜய் இரவு 7 மணிக்கே கரூர் பிரச்சார இடத்திற்கு வந்தார். தவெக தலைவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே கூட்டநெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் கூட்டத்திற்கான ஏற்பாட்டை ஏற்பட்டாளர்கள் சரியாக செய்யவில்லை, உணவு, தண்ணீர் என எதற்கான ஏற்பாடும் இல்லை, இயற்கை உபாதைகளுக்கு கூட பெண்கள் கடினப்பட்டனர்.
கூட்ட நெரிசல் சம்பவத்தால் கூட்டநெரிசலிலிருந்து வெளியேற அருகிலிருந்த தகர கொட்டகையை எல்லாம் மக்கள் தகர்க்க முற்பட்டுள்ளனர். அதனால் மின்சாரம் தாக்கப்படும் என்பதால் மட்டுமே ஜென்ரேட்டர் ஆப்ரேட்டர் மின்சாரத்தை துண்டித்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல், சோர்வால் மக்கள் பாதிக்கப்பட்டதை கண்ட காவலர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்த நிலையில், தவெக தொண்டர்கள் ஆம்புலன்ஸை சேதப்படுத்தி ஓட்டுநர்களை தாக்கியுள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் 7.30 மணியளவில் முதல் பாதிக்கப்பட்டவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து சுமார் 200-க்கு மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடலை வைக்க போதிய இடவசதி இல்லாததால் தனிக்குழு வரவழைக்கப்பட்டு அன்று இரவே உடற்கூராய்வு நடத்தப்பட்டு குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தை தமிழ்நாடு அரசு சட்டப்படி விரைந்து கையாண்டது. இதுபோன்ற துயரங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது என முதலைமச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.