மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த இந்தியா முழுவதிலும் இருந்து அரசியல் கட்சித் தலைவர்களும், முதலமைச்சர்களும் டெல்லி புறப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார். அவர் செல்லக்கூடிய விமானத்திலேயே திமுக எம்பி கனிமொழியும் டெல்லி செல்ல இருக்கிறார்.,
அதேசமயத்தில் மன்மோகன் சிங் மறைவையொட்டி தமிழ்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. துக்கம் அனுசரிக்கப்படும் 7 நாட்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே மன்மோகன் சிங்கின் உடல் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு நாளை கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடல் வைக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.