தியாகராய நகர் சென்னையில் முக்கிய வணிக நகரமாக உள்ளது. வீட்டிற்கு தேவையான பொருட்கள், புதுத் துணிகள், நகைகள் என பலத்தேவைகளுக்கும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தி நகருக்கு வந்து செல்கின்றனர். இதனால், தி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
இந்நிலையில் தான், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை தியாகராயநகரில் ஏற்கனவே தெற்கு உஸ்மான் சாலை வரை 800 மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை இணைத்து புதிய மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டது. புதிய மேம்பாலத்திற்கான பணிகளை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, 164 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் இந்த மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 53 துாண்களுடன் 7.5 மீட்டர் அகலம் உடைய இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு, 3800 மெட்ரிக் டன் இரும்புடன் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையின் முதல் இரும்பு மேம்பாலமான இந்த மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று திறந்து வைத்தார். தொடர்ந்து, பாலத்தில் சிறிது தொலைவு நடந்து சென்று முதல்வர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், 53 இரும்புத்தூண்களுடன் இருவழிப்பாதையாக கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்திற்கு மறைந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 40,000 வாகனங்கள் வரை மேம்பாலத்தில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.