சட்டப்பேரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றம்: முதல்வர் சொன்ன ஒற்றை வார்த்தை!

மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

PT WEB

இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தொழிலதிபர் ரத்தன் டாடா, முரசொலி செல்வம் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அதன் பின்னர் கேள்வி - நேரம் தொடங்கியது. இதையடுத்து 2024- 25ஆம் ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அனைத்து கட்சிகளும் தங்களது ஒப்புதல்களை வழங்கினர். இறுதியில், உரை நிகழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின், “வேகமாக பேசுவதன் காரணமாக சாதித்துவிட்டோம் என்று நினைக்க வேண்டாம். நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானத்தை எங்கள் உறுப்பினர்கள் பேசி உள்ளார்கள். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. தொடர்ந்து கண்டன குரல்களை பதிவு செய்துள்ளோம். போராட்டம் நடத்திய மக்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளோம். எங்களால் தீர்மானத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. அங்க அவங்க மெஜாரிட்டி இருக்கப்போ நாங்க எப்படி தடுக்க முடியும்? எதிர்க்கட்சித் தலைவரே சொல்லட்டும்...

நிச்சயமாக சொல்கிறேன்... உறுதியாக சொல்கிறேன்... ஒன்றிய அரசு சுரங்கத்திற்கு ஏலம் தொடங்கினாலும், இந்த அரசு அந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்காது. இதுதான் எங்கள் முடிவு.

திரும்பத் திரும்ப ஒன்று சொல்கிறேன். நான் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் வரை இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவரமுடியாது. அனுமதிக்கமாட்டோம்” என்றார் திட்டவட்டமாக.