தமிழ்நாடு

ட்விட்டரில் உதவி கேட்ட பாதுகாப்பு படை வீரர்.. தைரிய வார்த்தைகள் சொன்ன முதல்வர் பழனிசாமி..!

webteam

ட்விட்டரில் கோரிக்கை வைத்த எல்லைப் பாதுகாப்பு படை வீரருக்கு முதலமைச்சர் பழனிசாமி தைரிய வார்த்தைகள் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதனால் ஊரடங்கு விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஒரு வகையில் கொரோனா பரவல் ஓரளவு தடுக்கப்பட்டாலும், இதனால் ஆதரவற்றோர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அதில் “ ஐயா நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் அகமதாபாத்தில பணியில் உள்ளேன். எனது தாயாருக்கு 89 வயது. வீட்டில் தனியாக உள்ளார்; உடல் நிலை சரியில்லை. எனக்கு தந்தையும் இல்லை, சகோதரனும் இல்லை, எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் “தங்கள் தாயாருக்கு தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லை. நலமாக உள்ளார். தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.