தமிழ்நாடு

போர்க்கால அடிப்படையில் புயல் மீட்பு நடவடிக்கை: முதலமைச்சர் பழனிசாமி

போர்க்கால அடிப்படையில் புயல் மீட்பு நடவடிக்கை: முதலமைச்சர் பழனிசாமி

webteam

கனமழையால்‌‌ பாதிக்கப்‌பட்ட கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். 

ஒகி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளன. இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, புயலால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் பாதிக்கப்‌பட்ட பகுதிகளில் வருவாய்த்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்கள் நேரடியாக ஆய்வு செய்து நிவாரண பணிகளை துரிதப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் காரணமாக இதுவரை 3,750 மின்கம்பங்கள் ‌சாய்ந்துள்ளதாகவும், அவற்றை சீர் செய்ய இரண்டாயிரம் மின்வாரிய பணியாளர்கள்‌ பிற மாவட்‌டங்களில் இருந்து அங்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துக்கொண்டார். இதற்கிடையே தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளுக்கு உதவ மத்திய அரசு தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் பாதிப்படைந்த பகுதிகளின் நிலை குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் தொலைபேசியில் பிரதமர் கேட்டறிந்தார்.