அதிக நாட்கள் அதிக உபரிநீர் வெளியேறிய அழுத்தத்தால் முக்கொம்பு அணை மதகுகள் உடைந்ததாக முதலமைச்சர் பழனிசாமி
தெரிவித்துள்ளார்.
திருச்சி முக்கொம்பு அணையில் 9 மதகுகள் உடைந்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அங்கு சென்று
ஆய்வு செய்தார். மதகுகளை சீரமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உடைந்திருந்த பகுதிகளை நேரில்
பார்த்து, சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதகுகள் உடைப்பை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்னும் சில நாட்களில் பணிகள் நிறைவடையும். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மதகுகள் உடைந்தது என்பது முற்றிலும் தவறு. ஆற்றில் அதிக அளவில் கழிவுநீர் வருகின்றது. அவற்றால் மதகுகளில் அரிப்பு ஏற்பட்டு உடைந்துள்ளது.
தற்போது புதிய மதகுகள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கொள்ளிடம் மேலனை மதகுகள் கட்டப்பட்டு 182
ஆண்டுகள் ஆகிவிட்டன. செங்கற்களால் கட்டப்பட்ட இந்த அணையில் இதற்கு முன்னர் எல்லாம் 5 நாட்கள் தான் உபரி நீர்
வெளியேற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை தொடர்ந்து முதற்கட்டமாக 8 நாட்கள் உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இரண்டாம்
கட்டமாக 12 நாட்கள் உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாக அதிகமான அழுத்தம் ஏற்பட்டு மதகுகள் உடைந்துள்ளது”
என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கொள்ளிடம் அணியின் இருபுறத்திலும் ரூ.325 கோடி மற்றும் ரூ.85 கோடியில் புதிய கதவணை கட்டப்படும்.
இன்னும் 15 மாதங்களுக்குள் அப்பணி நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது. மணல் அல்லப்படுவதற்கும், அணை உடைந்ததற்கும்
எந்தத் தொடர்பும் இல்லை. ஏனெனில் அணையில் இருந்து குறிப்பிட்ட தூரம் தாண்டியே மணல் அள்ளப்படும்” என்று கூறினார்.